சங்கரத்தினர்களுக்கு 9 நாட்கள் பப்பஜா (தற்காலிக பிக்கு) பயிற்சி
தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதமசன்னா ஆலோசனையின் பேரில், தமிழகத்தில் உள்ள புத்தவிஹார் பொறுப்பாளர்களான சங்கரத்தினர்களுக்கு 9 நாட்கள் பப்பஜா (தற்காலிக பிக்கு) பயிற்சி பெங்களூர் மகாபோதி சொசைட்டியில் அளிக்கப்பட்டது.
சங்கரத்தினர்கள் ஆர்.திருநாவுக்கரசு, கோவி.பார்த்திபன், ஆர்.போதிசந்திரன் ஆகியோர் சங்கரத்தினர்கள் 23 பேரை ஒருங்கிணைத்து அழைத்துச் சென்றனர்.
பயிற்சியில் பதண்ட் டாக்டர் நாகராஜா, பிக்கு புத்தபிரகாசம் ஆகியோர் கலந்துகொண்டு வழி நடத்தினர். பயிற்சியில் புத்தரின் எழுச்சியூட்டும் வாழ்க்கை நிகழ்வுகள், மற்றும் அடிப்படை போதனைகள் போதிக்கப்பட்டது. மன அழுத்தம், மனச்சோர்வு, கோபம், பேராசை, பொறுமையின்மை போன்றவற்றைக் கடந்து மதிப்பு சார்ந்த அமைதியான வாழ்க்கையை வாழ்ந்திடவும், ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணவும், அன்பு, கருணை, மன சமநிலை, குடும்ப ஒற்றுமை, மன அமைதிஆகியவற்றை வளர்த்துக் கொள்ளவும், சமூகதாயத்தில் அன்பு, நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றை பரப்பிடவும், குடும்ப வாழ்க்கையின் பொறுப்புகளை நிறைவேற்றி அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்திட தினசரி பயிற்சி அளிக்கப்பட்டது.
முன்னதாக பயிற்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் பாலி பெயர்கள் சூட்டப்பட்டது. பிக்கு உடையான சீவரம் அணிவிக்கப்பட்டு பிண்டபாத்திரம் வழங்கப்பட்டது. மேலும் காலை மாலை பௌத்த வழிபாடு, விபாசனா தியானம், அன்புறுநேயத்தை வளர்த்து கொள்ளும் மெத்தபாவனா தியானம், நடை தியானம், புத்த தம்ம நன்னெறி வகுப்புகள் மகாபோதி சங்கத்தின் தலைமை பிக்கு மதிப்பிற்குரிய ஆனந்தா மற்றும் புத்த துறவிகள் பிக்கு தம்மதத்தா, பிக்கு தம்மதிஸ்ஸா, பிக்கு சித்தார்த்தா ஆகியோரால் கற்பிக்கப்பட்டது.
சங்கரத்தினர் தீபன் சக்கரவர்த்தி தமிழில் மொழிபெயர்ப்பு செய்தார். 9 நாட்களும் தற்காலிக பிக்குகளுக்கான பத்து ஒழுக்கங்கள், 75 விதிமுறைகளை கடைபிடித்து அமைதியான மகிழ்ச்சியான துறவு வாழ்க்கையையும், சீவர உடை, பிண்டபாத்திரம், உணவு, தங்குமிடம் மற்றும் பயிற்சிக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்ட பெங்களூரு மகாபோதி சங்கத்திற்கு தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் இது போன்ற தொடர் பயிற்சிகளை நடத்துவது என தமிழ்நாடு பௌத்தர்கள் சங்க பேரவை திட்டமிட்டுள்ளது. அதற்கான செயல் திட்ட ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா அவர்கள் தெரிவித்துள்ளார்.