பெறல்
தமிழ்நாட்டின் அனைத்து பௌத்தர்கள், பௌத்த இயக்கத்தவர், அனைத்து பத்திரிக்கை ஆசிரியர்கள், அனைத்து காட்சி ஊடகத்தினர் மற்றும் மற்றும் பொதுமக்கள்
அன்புடையீர் வணக்கம்.
800 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக 18.02.2025 செவ்வாய்க் கிழமை அன்று தமிழ்நாட்டில் – காஞ்சீவரத்தில் நடைபெறும் 150 பிக்குகள் கலந்துக் கொள்ளும் மாபெரும் தம்மப் பேரணி மற்றும் திரிபிட சத்தம்ம சஜ்ஜயனா எனுதி திரிபிடக சத்தம்ம ஓதும் மாநிகழ்வில் (மாநாட்டில்) கலந்துக் கொள்ள தங்களை அன்புடன் அழைக்கிறோம். இந்நிகழ்வை தமிழ்நாடு அரசின் சிறுபான்மை ஆணையம் ஒருங்கிணைக்கிறது.
காலை 8 மணிக்கு காமாட்சி அம்மன் சன்னதி தெரு அருகே தொடங்கும் பிக்குமார்கள் தம்மவலம் காஞ்சி புத்தர் திருக்கோயிலை அடைந்தப் பிறகு காலை சஜ்ஜயனா நிகழ்வுத் தொடங்கும். மாலை 6 மணி வரை அது நடைபெறும்.
இந்நிகழ்விற்கு தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவையின் மகா சங்காதிபதி வண.பிக்கு தம்மசீலர் தலைமையில் சங்க மகா துணைத்தலைவர்கள் வண.பிக்கு பதாந்த் நாகராஜ், வண.பிக்கு.புத்தப் பிரகாசம், சங்கமகா செயலாளர் வண.பிக்கு.போதிஅம்பேத்கர், வண.பிக்கு.ஜெயசீலர், வண.பிக்கு. குணசீலர், வண.பிக்கு.ஜீவசங்கமித்திரன், வண.பிக்குணி அமராவதி, வண.பிக்குணி தமிழ்க்கோவை, வண.பிக்கு.பௌத்தம் பாலா ஆகியோர் பிக்கு பிக்குணிகள் முன்னிலையில் 150 வண.பிக்குமார்களை வரவேற்கின்றனர்.
நிறைவு நிகழ்வில் சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ச.மு.நாசர், தலைமைத் தாங்குகிறார். எழுச்சித் தலைவர் டாக்டர்.தொல்.திருமாவளவன்,நாமஉ, சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருட்தந்தை. முனைவர்.சொ.ஜோஅருண்.சேச ஆகியோரும் முதண்மை விருந்தினர்களாக கலந்துக் கொள்கின்றனர். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஜி.செல்வம், துணைத் தலைவர் திரு.டாக்டர். இறையன்பன் குத்தூஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.சி.வி.எம்.பி.எழிலசரன், மாநகர மேயர் மகாலட்சுமி, மாவட்ட ஆட்சியர், சிறுபான்மை நலத்துறை உறுப்பினர்கள் மற்றும் பௌத்த இயக்கத் தலைவர்கள் கலந்துக் கொள்கின்றனர். தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா நெறியாள்கை செய்கிறார்.
தமிழ்நாட்டு புத்தமதத்தின் வெற்றிச்சுவடுகள் எனும் நூலை மாண்புமிகு அமைச்சர் திரு.ச.மு.நாசர் வெளியிட, மாண்புமிகு எழுச்சித் தலைவர் டாக்டர் தொல்.திருமாவளவன் நா.ம.உ அவர்கள் பெற்றுக் கொள்கிறார்.
திரிபிட சத்த சஜ்ஜயனா எனும் திரிபிடச சத்தம்மம் ஓதும் நிகழ்வின் முதண்மைத்துவம்
சஜ்ஜாயனா (அல்லது சஜ்ஜாயா) என்பது புத்தர் மறைந்தப் பிறது உருவான ஒரு நடைமுறை மரபாகும். புத்தர் போதித்த திரிபிடகங்களை ஓதுதல், உரக்கப் படித்தல் மற்றும் மீண்டும் ஓதுதல் என்று நிகழ்த்தப்படுகிறது. இந்த நடைமுறையினை பிக்கு, பிக்குணிகள் மற்றும் உபாசகர்களான பௌத்த மதத்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய கடமைகளுள் ஒன்று. இதன் மூலம் பௌத்த பண்பாட்டைப் பாதுகாப்பதுடன் அடுத்த தலைமுறையினருக்கு கைமாற்றித் தருவதற்கான வாய்ப்பையும் இது வழங்குகிறது.
சஜ்ஜாயனாவின் முதண்மை அம்சங்கள்:
திரிபிடக நூல்களை ஓதுதல் : சஜ்ஜாயனாவில் திரிபிடகத்தின் பகுதிகளான சூத்திரங்கள் எனும் புத்தரின் உரைகள், வினயம் எனும் துறவிகள் குறித்த விதிகள் மற்றும் அபிதம்மம் புத்த தத்துவம் மற்றும் உளவியல் பகுப்பாய்வுகள் ஆகியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் ஓதப்படுகின்றன. இது புத்தரின் போதனைகளை துல்லியமாக தலைமுறை தலைமுறையாக பாதுகாப்பதற்கு உதவுகிறது.
தியான மற்றும் சிந்தனை நடைமுறை : திரிபிடகம் ஓதும் போது, ஓதுபவர்களுக்கு நூல்களின் பொருளைப் பற்றி சிந்திக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம் தம்மத்தைப் பற்றிய அவர்களின் புரிதலை ஆழப்படுத்துகிறது. எனவே, இது ஒரு சடங்குப் போல நிகழாமல் மீண்டும் மீண்டும் நினைவுறுத்தி நடைமுறையில் தொடர்வதற்கான வழிமுறையாக இருக்கிறது.
கூட்டு நடவடிக்கை : சஜ்ஜாயனா பெரும்பாலும் குழுக்களாகவே செய்யப்படுகிறது, எடுத்துக்காட்டாக விகார்களில் அல்லது புத்தர் திருக்கோயில்களில் அல்லது புத்த மதத்தவர்களின் கூட்டங்களில் சமூக மற்றும் மதங்களுக்கு இடையே ஒற்றுமையை வலியுறுத்தவும் மேற்கொள்ளப்படுகிறது. பௌத்த விகாரைகளில் புத்த பிக்கு மற்றும் பிக்குணிகளால் மேற்கொள்ளப்படும் தினசரி கூட்டு செயல்பாடுகளில் ஒன்றாகவும் இது இருக்கிறது.
புத்த தம்மத்தைப் பாதுகாத்தல் : புத்த காலத்திற்குப் பிறகு அவரது போதனைகள் எழுத்தால் எழுதப்படவில்லை. எனவே புத்தரது போதனைகள் வாய்மொழியால் ஓதும் முறையே முக்கிய முறையாக இருந்தது. அதில் சஜ்ஜாயனா முக்கிய பங்கு வகித்தது.
கடமை மற்றும் நன்மைகள் : திரிபிடன நூல்களை ஓதுவது கண்ணியமிக்க நன்மை தரும் செயலாகக் கருதப்படுகிறது, இது பயிற்சியாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் நிறைவான மன நன்மைகளைத் தருகிறது. மேலும் மனதைத் தூய்மைப்படுத்தவும், நினைவாற்றலை கூர்மைப்படுத்தி வளர்க்கவும் உதவுகிறது.
இன்று ஏன் : பகவன் புத்தரின் காலத்திற்குப் பிறகு தொடங்கப்பட்ட இந்த நடைமுறை அவரின் போதனைகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கைமாற்றித்தரும் மரபு நடவடிக்கையாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருக்கும் இம்மரபு இந்த தமிழகத்தில் 13 நூற்றாண்டில் மறைந்துப் போனது. தற்போது உலக திரிபிடகம் ஓதும் பேரவையின் மூலம் தமிழ்நாட்டில் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது. அதை தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை ஒருங்கிணைக்கிறது.
காஞ்சிவரத்தின் சிறப்பு : தமிழ்நாட்டில் பௌத்த மதம் முதன்முதலாக அரச மதம் என்ற தகுதியை பெற்ற மதமாகும். இது கிமு 2ஆம் நூற்றாண்டில் இருந்து கிபி 13 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் பரவலாக கடைபிடிக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் காஞ்சிபுரம் தமிழக பௌத்தர்களின் தலைநகரமாக விளங்கியது. காஞ்சி என்றால் காவி என்று பொருள், சீவரம் என்றால் புத்த துறவிகள் அணியும் ஆடைக்குப் பெயர். எனவே புத்ததுறவிகள் அதிகமாக வாழ்ந்ததால் அந்நகர் காஞ்சீவரம் என்று அழைக்கப்பட்டது. அது மருவி காஞ்சிபுரமானது. இந்நகரில் மாமன்னர் அசோகர் மிகப் பெரிய தம்மத் தூணை நிறுவினார். அதை தான் கண்டதாக யுவாங்சுவாங் எழுதியுள்ளர். மேலும் அந்நகரில் காஞ்சிக் கடிகை எனும் பௌத்த பல்கலைக்கழகமும் 100க்கும் மேற்பட்ட புத்த விகாரைகளும் இருந்தன. அவற்றில் சுமார் 10,000 மேற்பட்ட மாணாக்கர்களும் பயின்றனர் என்று அவர் பதிவு செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி புத்தர் இந்நகருக்கு வருகை தந்தார் என்கின்ற செய்தியை புத்த இலக்கியங்கள் சில குறிக்கின்றன. பல பௌத்த அறிஞர்கள் இங்கு தோன்றி உலகின் பல்வேறு நாடுகளுக்கு போய் தமிழ்நாட்டின் பௌத்தத்தை பரப்பி உள்ளார்கள். குறிப்பாக, நாளந்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தர்மபாலர், ஜென் புத்தத்தை தோற்றுவித்த போதி தர்மர் ஆகியோரைக் குறிப்பிடலாம். மேலும் பௌத்த துணைத் தெய்வங்களாக கருதப்பட்ட மணிமேகலை, அவலோகிதர், தாராதேவி ஆகியோருக்கு கோயில்கள் இருந்ததாக குறிப்புகள் உள்ள. எனவே பண்டைக் காலம் முதல் காஞ்சிபுரம் பன்னாட்டு பௌத்த உறவோடு இருந்தது என்பது புலனாகும்.
ஒருங்கிணைப்பு : தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் ஆணையம் இந்நிகழ்வை ஒருங்கிணைக்கிறது. புத்தகயாவில் உள்ள அகில இந்திய பிக்கு சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஒரே பௌத்த மத அமைப்பான தமிழ்நாடு பௌத்தர்கள் சங்க பேரவையின் ஓருங்கிணைப்பில் International Tipitaka Chanting Council – Light of Buddha Dharma Foundation – India இந்நிகழ்வை தமிழகத்தில் இந்நிகழ்ச்சியை நிகழ்த்துகின்றன.
அழைப்பு : மிகக்குறுகிய காலத்தில் இந்நிகழ்ச்சிக்கான அனுமதியைப் பெற்றுள்ளோம், எனவே தங்களை நேரில் சந்தித்து விளக்க முடியாமைக்கு எமது வருத்துகிறோம். ஆயினும் இக்கடிதத்தின் மூலமாக தேவையான விளக்கம் கிடைக்கும் என நம்புகிறோம். எனவே பௌத்தர்களும், பௌத்த இயக்கத்தினரும் பொதுமக்களும் கலந்துக் கொண்டு தமிழ்நாட்டில் புத்த தம்மம் தழைத்தோங்க ஒன்றிணையும் படி தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தங்களது பங்கேற்பு இந்நிகழ்ச்சி பெருமை சேர்ப்பதுடன் ஒற்றுமையையும் நிலைநாட்டும் என்று நம்புகிறோம். எனவே மாநாட்டில் 150 பிக்குகள் கலந்துக் கொள்ளும் தம்மப் பேரணியிலும் தொடர்ந்து நடைபெறும் மாநாட்டிலும் கலந்துக் கொள்ள அனைப்புடன்
காஞ்சிபுரம், வையாவூரில் உள்ள காஞ்சி புத்த விகாரில் 18.02.2025 செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் நடைபெறும் இந்நிகழ்வில் பௌத்த பிக்குகள் அனைவரும் 2 கிலோ மீட்டர் பேரணியாக நடந்து விகாரை அடைவார்கள். அங்கு சஜ்ஜயனா நிகழ்வு தொடங்கும்.
காஞ்சி மாநகரில் நடபெறும் இப்பெருமைமிகு நிகழ்வில் நீங்கள் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என கேட்டுட்க கொள்கிறோம். அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் வருக.. தம்ம நல்வாழ்த்து பெறுக..
நன்றி இவண் வண.பிக்கு.போதி அம்பேத்கர் சங்க பரிபாலன மகா செயலர் தமிழ்நாடு பௌத்தர் சங்க பேரவை (TNBSC) ஜா.கௌதம சன்னா நிறுவனர் மற்றும் தலைமை தமிழ்நாடு பௌத்தர் சங்க பேரவை (TNBSC)ஒருங்கிணைப்பாளர்