தமிழகத்தில் புத்தரைப் பின்பற்றி தமிழகத்தை கலை மருத்துவம் இலக்கியம் நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் செழிக்கவைத்த தமிழக பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்தர்களை ஒருங்கிணைத்த தமிழக பௌத்தர்களின் சங்கம் தமிழக வரலாற்றில் 800 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து போனது. வரலாற்று சிறப்புமிக்க அந்த பௌத்த மத தலைமை நிர்வாக அமைப்பினை, தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை எனும் பெயரில் மீள் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தின் பௌத்த வரலாறு ஒரு முழுமையோடு மீட்டெடுக்கப்படுகிறது. பௌத்தம் ஒரு மதம் என்கிற முழுமையான அமைப்பாக 800 ஆண்டுகள் கழித்து மீண்டும் உருவாகிறது.
தமிழகத்தில் மகா சங்காதிபதி தலைமையில் இயங்கிய பௌத்த மத அமைப்பு முறை எனும் தமிழ் பௌத்த மரபு மீண்டும் நடைமுறைக்கு வருகிறது.
இந்த தலைமை பௌத்த நிர்வாகத்தை பிக்கு-பிக்குணிகள் வழிநடத்துவார்கள். இந்த சங்கப்பேரவை மகாசங்காதிபதி உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளை தமிழக பிக்கு மற்றும் பிக்குணிகளோடு இணைந்து விகார்களை நிர்வகிக்கும் பொறுப்பாளர்களான சங்கரத்தினர்களும் தேர்வு செய்வார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த தலைமை அமைப்பை அறிமுகப்படுத்தும் சங்கப்பரிபாலன அறிமுக மகாமங்கள கங்கன நிகழ்வும், விகார் பரிபாலன சங்கரத்தினர்கள் பதவியேற்பு நிகழ்வும் காஞ்சிபுரம் அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் 07/11/2021 அன்று காலை 10 மணி முதல் நடைபெற்றது.
தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா தலைமை தாங்கினார். சங்கரத்தினர் கோவி.பார்த்திபன் வரவேற்புரை நிகழ்த்தினார். சங்கரத்தினர்கள் தங்கவயல் வாணிதாசன், டாக்டர் ராஜவர்தனன், டாக்டர் பெரியசாமி, அம்பேத்ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கரத்தினர் ஆர்.போதிசந்திரன் உறுதிமொழியை வாசிக்க, தமிழகம் முழுவதிலும் உள்ள புத்தவிகார்களின் பொறுப்பாளர்கள் 52 பேரும் உறுதி மொழியேற்று, ஒவ்வொருவரும் சங்கரத்தினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். சங்கரத்தினர் மகாதினகரன் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.
பின்பு சங்கப் பேரவை கங்கன மங்கல அறிமுக நிகழ்வு மகா சங்காதிபதியாக பொறுப்பேற்க உள்ள மகாசங்கதிபதி வணக்கத்திற்குரிய பிக்கு தம்ம சீலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வணக்கத்திற்குரிய பிக்குகள் புத்தபிரகாசம், சமண அரியபிரம்மா, ஜெயசீலா, பிக்குணிகள் தீபம்மாள் சுந்தரி, அமராவதி ஆகியோர் முன்னிலையில்
காஞ்சி அழகிய மணவாள ஜீயர் மட துறவி சம்பத்குமார ராமானுஜ ஜீயர், ஜீனகாஞ்சி ஜைன மட சர்வ ஜினாலய பரிபாலகர் லஷ்மிசென் பட்டாரகர் மகா ஸ்வாமிகள், இராமகிருஷ்ண மட மூத்த துறவி சுவாமி ஜனனமயனம் தாஜி, செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயரின் பொதுப்பதில் குரு அருள்பணி ஞா.பாக்கியரெஜிஸ், காஞ்சி ஐக்கிய ஜமாத் தலைவர் ஜனாப் ஜே.முகம்மது ஆகியோர் கலந்துகொண்டு தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவையின் கொடி, சின்னம் ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்து வாழ்த்திப் பேசினர்.
முன்னதாக சங்கரத்தினர்களுக்கு அடையாள அட்டை பிக்கு பிக்குணிகளுக்கான அடையாள அட்டையை வழங்கி சங்கரத்தினர்கள் பணிகள், பிறநாடுகளில் பௌத்த வழிபாட்டு முறைகள், தமிழக சிறுபான்மை ஆணையத்தில் நமது உரிமைகள் மற்றும் 800 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டெழும் பௌத்தம் குறித்தும் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை தலைவர் கௌதமசன்னா விளக்கிப்பேசி மங்கள நிறைவு செய்தார். இறுதியாக சங்கரத்தினர் காஞ்சி ஆர்.திருநாவுக்கரசு அனைவருக்கும் நன்றி கூறினார்.

