#தமிழ்நாடு_பௌத்தர்கள்_சங்கப்_பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் #கௌதம_சன்னா தலைமையில் விகார் கவுன்சில் செயலாளர் ஆர். திருநாவுக்கரசு, பொருளாளர் கோவி பார்த்திபன், சிறுபான்மை நலக்குழு உறுப்பினர் அவையின் செயலாளர் ஆர்.போதிசந்திரன், விகார் கவுன்சில் துணை செயலாளர் எஸ்.வசந்த், பௌத்த மகளிர் கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் தேவி ஆகியோர் #தமிழ்நாடு_சிறுபான்மை_நலத்துறை_அமைச்சர்_மாண்புமிகு_செஞ்சி_கே_எஸ்_மஸ்தான் அவர்களை சந்தித்து தமிழ்நாடு பௌத்தர்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
தமிழ்நாட்டில் மறைந்து போன தமிழ்நாட்டு பௌத்தர்கள் தலைமை மத அமைப்பு 800 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மகா சங்காதிபதியின் தலைமையில் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை என்னும் பெயரில் இயங்கத் தொடங்கியுள்ளது என்பதை பெருமையோடு அறிவிக்கிறோம்.
இத்தலைமை அமைப்பு தமிழ்நாடு பௌத்தர்களின் அனைத்து மத நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்கும். அனைத்து பௌத்த அமைப்புகளையும் அவ்வமைப்புகளின் தனித்தன்மைகளை பாதுகாத்து அரவணைத்து தம்ம பரவலில் ஈடுபடும் என்பதையும் இதன் மூலமாக அறிவிக்கிறோம்.
தமிழ்நாடு பௌத்தர்கள் அனைவரும் தமக்கான மத அமைப்பினை ஏற்று அங்கீகரித்து பிற சிறுபான்மை மதத்தவர்கள் எப்படி தங்களின் மத அமைப்பினை மதித்து பின்பற்றுகிறார்களோ அதைப்போல நம் மத அமைப்பினை பின்பற்றி பௌத்த மதமேற்பு, திருமணம், பிறப்பு, இறப்பு, புத்தர் திருக்கோயில்கள் வழிபாடு உள்ளிட்ட அனைத்தையும் ஒரே சீரான முறையில் பின்பற்ற முன்வருமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள பௌத்த வழிபாட்டிடங்கள் (சேத்தியங்கள்) விகார் அல்லது விகாரைகள் என்று பாலி மொழியில் அழைக்கப்படுகின்றன. இனி அவை அரசன் எனப் பொருள்படும் #கோ என சித்தார்த்தரின் தம்மம் வசிக்கும் #இல் எனும் பொருளில் #கோஇல் என அழைக்கப்பட்டது. அந்தப் பண்டைய முறையினைப் பின்பற்றி அனைத்து பௌத்த விகாரைகளும் இனி அடைமொழி சேர்த்து #புத்தர்_திருக்கோயில் என அழைக்கப்படும் என்பதை இதன் மூலமாக அறிவிக்கிறோம்.
உதாரணம். தியாக புத்தர் திருக்கோயில் தியாகனூர்.
1. சமணம் என்கிற பொதுச் சொல் பௌத்தம், ஆசீவகம் மற்றும் ஜைனம் ஆகிய அமண மதங்களைச் குறிக்கும் சொல் ஆகும். இச்சொல்லை ஜைனத்தை மற்றும் குறிக்கும் சொல்லாகப் பயன்டுத்தாமல் இம்மதங்களின் தனித்தன்மையினை காக்கும் வகையில் அந்தந்த மதங்களின் பெயரிலேயே அங்கீகரிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. தமிழக இந்து அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் ஜைன மதத்தினை வைத்து பாதுகாத்து உதவிகளைச் செய்வது போல, பௌத்த மதத்தையும் கொண்டு வர வேண்டும். அதை அத்துறையின் கீழ் தனியாக ஜைன – பௌத்த அறநிலையப் பிரிவு என அடையாளப்படுத்த வேண்டும்.
3. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறுபான்மையினர் ஆணையங்கள் பௌத்தர் மற்றும் ஜைனர்களை பெரும்பாலும் கண்டுக் கொள்வதில்லை. எனவே இந்த சிறுபான்மையினர் ஆணையங்கள் மாற்றப்பட்டு, அவை நேரடியாக பௌத்த சிறுபான்மையினர் ஆணையம், ஜைன சிறுபான்மையினர் ஆணையம், கிறுத்துவர் சிறுபான்மையினர் ஆணையம், இசுலாமியர் சிறுபான்மையினர் ஆணையம் என பிரிக்கப்பட்டு ஓர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துறையாக மாற்றப்பட வேண்டும் எனவும், பௌத்தர்கள் தமது சிறுபான்மையின அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை பெறுவதற்கும் தகுந்த சட்டப்பாதுகாப்புகளை உருவாக்கித் தரவேண்டும் என ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளை இதன்மூலம் கேட்டுக் கொள்கிறோம்.
4. பௌத்த – ஜைன மதத்தவர்களுக்கென தனியாக நல வாரியம் ஒன்றை அமைத்து அவர்களின் மேம்பாட்டிற்கு உதவ தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். மேலும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்க்ளை நடத்த அரசு உதவி செய்வதைப் போல பௌத்த மதச் சிறுபான்மையினர் கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களை தொடங்கி நடத்திட தேவையான நிதி மற்றும் பிற உதவிகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
5. மத்திய மாநில அரசுகள் சிறுபான்மையினர் நல நிதியத்தை உருவாக்கி பௌத்த சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் தமது சமூக அரசியல் பொருளாதார நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும் கல்வி மற்றும் மருத்துவ அமைப்புகளை உருவாக்கி மக்களுக்குப் பணியாற்றும் வகையிலும் தேவைப்படும் நிதி உதவிகளை மேற்கண்ட நிதித்தொகுப்பிலிருந்து பெற வழிவகை செய்ய வேண்டும் என்றும், வங்கிக் கடன்களைப் பெறுவதில் இவர்களுக்கு சிறப்பு முன்னுரிமையை அளிக்க வகை செய்யும் படியும் மத்திய அரசினை கேட்டுக் கொள்கிறோம்.
6. வணக்கத்திற்குரிய மகா சங்காதிபதியின் தலைமையில் வழிகாட்டலில் இயங்கத் தொடங்கியுள்ள தமிழ்நாடு பௌத்தர்களின் தலைமை மத அமைப்பான தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவையினை தமிழ்நாடு பௌத்தர்களின் தலைமை மத அமைப்பாக அங்கீகரிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் சீரோடும் சிறப்போடும் இயங்கும் தமிழ்நாடு அரசிற்கு இதன்மூலம் வேண்டுகோள் விடுக்கிறோம்.
7. தமிழகத்தில் உள்ள பௌத்தத் துறவிகளான பிக்குகள் மற்றும் பிக்குணிகளுக்கு பிட்சையேற்று தம்மப் பணியாற்றும் கடமையில் இருக்கின்றனர். அவர்களுக்கென தனி வருமானம் கிடையாது, எனவே அவர்கள் பேருந்து மற்றும் தொடர் வண்டிகளில் இலவசமாக பயணிக்க தேவையான அடையாள அட்டைகளை தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும், கிராமப் பூசாரிகளுக்கு மாதாமாதம் வழங்கப்படும் சிறு ஊதியம் போல தமிழ்நாட்டு பௌத்த பிக்கு பிக்குணிகளுக்கும், புத்தர் திருக்கோயில்களை பராமரிக்கும் புத்த பூசகர்களுக்கும் மாத நிதி நல்கையினை தமிழ்நாடு அரசு வழங்க முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
8. பௌத்த நாடுகளில் உள்ள மக்கள் தமிழ்நாட்டின் தொண்மையான பௌத்த தலங்களுக்கு வர விரும்புகின்றனர். ஆனால் அதற்கான உரிய தெளிவான வழிக்காட்டுதல்கள் இல்லை. எனவே தொண்மையான பௌத்த தலங்களை சுற்றுலாத்துறையின் பட்டியலில் இணைத்து மேம்படுத்த உதவுவதின் மூலமாக தமிழகத்திற்கு சுற்றுலாத் துறையின் மூலம் அதிக வருமானத்தினை ஈட்ட முடியும். எனவே தமிழ்நாட்டு பௌத்த திருத்தலங்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
9. பௌத்தர்கள் விகாரைகள் மற்றும் புத்த திருக்கோயில்களில் நடைபெறும் பௌத்தத் திருமணங்களை அங்கீகரிக்கும் விதமாக பௌத்தத் திருமணச் சட்டம் ஒன்றையோ அல்லது தேவையான சட்ட வழிகாட்டுதல்களை அரசு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
10. தமிழக அரசின் தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள புத்தரின் சிலைகள் மற்றும் பௌத்த தெய்வங்களின் சிலைகளை அருங்காட்சியகங்களில் வைப்பதின் மூலம் மக்கள் பார்வையிலிருந்து அவை விலக்கப்பட்டுள்ளன. மேலும் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்ட சிலைகள் அவை கிடைத்த இடங்களில் முறையாக சிறு வழிபாட்டு சேத்தியங்களைக் கட்டி அவற்றை அங்கே பராமரிக்க வேண்டும் என்றும், மக்கள் வழிபாட்டிற்கு அவற்றை மீண்டும் கொண்டு வர உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
11. தமிழகத்தில் ஆங்காங்கே புதையுண்டு கிடக்கும் மற்றும் சிதலமடைந்து கிடக்கும் புத்தரின் சிலைகளையும், புத்த சிறு தெய்வங்களின் கோயில்களையும் அடையாளங்கண்டு, அவற்றை ஒரு தகவல் தொகுப்பாகத் தொகுத்து வைக்கவும் அவற்றுக்கான வரலாற்று ஆதாரங்களைத் திரட்டி உலகின் முன் கொண்டு வரவும் தேவைப்படும் முயற்சிகளையும் இணைய தொழில்நுட்ப ஒருங்கிணைப்பையும் மேற்கொள்ள வேண்டும். மீட்கப்பட்ட புத்தரின் சிலைகளைக் கொண்டு சிறு விகாரைகளையும் கோயில்களையும் கட்டுவதற்கு பௌத்த அன்பர்கள் முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
12. நாகையில் மலேசியா மற்றும் இந்தோனேசியாவை ஆண்டு ஸ்ரீவிஜய மன்னர் ராசராச சோழனின் உதவியோடு கட்டிய சூடாமணி விகாரை தென்கிழக்காசிய நாடுகளோடு தமிழகத்தை இணைக்கும் மையப் புள்ளியாக இருந்தது. 19ஆம் நூற்றாண்டு வரை வழக்கத்தில் இருந்த அந்த விகாரையினை பிரிட்டிஷ்காரர்கள் இடித்து விட்டார்கள். பிறகு அந்த இடத்தில் நடந்த அகழ்வாய்வில் 350 புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அவை அனைத்தும் சென்னை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டாலும் மக்கள் பார்வைக்கு இன்னும் வைக்கப்படவில்லை. எனவே அவை உடனடியாக தனி அரங்கில் காட்சிக்கு வைக்க ஆவணச் செய்ய வேண்டும்.
13. பௌத்த சிறுபான்மையினர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் உள்ள சிக்கலை தீர்த்து மதம் மாறும் பௌத்தர்களுக்கு தடையின்றி சமூகத்தில் அவரவர்களுக்குள்ள அந்தஸ்து மாறாமல் பௌத்த சான்றிதழ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள தமிழக சிறுபான்மை நலத்துறையை கேட்டுக் கொள்கிறோம்.
14. காஞ்சி புத்தர் கோவிலுடன் இணைத்து, உலகப் புகழ்பெற்ற தமிழக ஜென் பௌத்த துறவியான போதிதர்மருக்கு, உலக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நினைவு மண்டபம் (14 ஏக்கர் நிலப்பரப்பில்) அமைப்பதற்கான திட்டம் ஒன்று தமிழ்நாடு சுற்றுலாத்துறையினால் உருவாக்கப்பட்டது. அந்த வரைவு அறிக்கை அரசு ஒப்புதலுக்காக சுற்றுலாத்துறையில் நிலுவையில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அந்த திட்டத்தை தங்களின் பெரு முயற்சியினால் செயல்படுத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தனர். கோரிக்கை மனுவினை பெற்றுக்கொண்ட மாண்புமிகு அமைச்சர் தமிழ்நாடு பௌத்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். பின்பு தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை நிர்வாகிகளுக்கு அறுசுவை விருந்தளித்து தானும் விருந்தில் கலந்துகொண்டு பெருமைப்படுத்தினார்.
செய்தி அளித்தவர் – கோவி பார்த்திபன்

