அறிவிப்பு..
விகார்களில் புத்த வழிபாடு நடத்துவதற்கான பயிற்சி அளிக்க தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை தொடர் திட்டத்தை செயல்படுத்த இருக்கின்றது.
முதன் முதல் பயிற்சி வருகின்ற 11-12 டிசம்பர் 2021 அன்று புளிச்சபள்ளம், மங்கள புத்த விகாரில் நடைபெற உள்ளது.
2 நாள் நடைபெறும் இந்த பயிற்சியில் புத்த விகாரை நிர்வகிக்கும் சங்கரத்தினர்கள் அல்லது அந்தந்த விகார்களில் புத்த வழிபாடு நடத்த விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
பௌத்த வழிபாட்டை முன்னின்று நடத்துபவர்களுக்கு விகார் மகா உபாசகர் என்கின்ற தொடக்கநிலை சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் விகார்களை நிர்வகித்தல், பதிவு செய்தல், கணக்கு வரவு செலவுகளை பராமரித்தல் உள்ளிட்ட பயிற்சியும் வழங்கப்படும்.
சங்கரத்தினர்கள் மற்றும் விகார்களில் தொடர்புடைய பவுத்த வழிபாடு செய்ய விருப்பமுள்ளவர்கள் ஒருங்கிணைப்பு குழுவினரைத் தொடர்பு கொள்ளவும்.
நிகழ்வில் மறைந்த மூத்த சங்கரத்தினர் ஐயா தங்கவயல் வாணிதாசன் அவர்களின் திருவுருவ படம் திறந்து வைக்கப்படும்.
கௌதம சன்னா
நிறுவனர் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை.

தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை சார்பில் விஹார் பரிபாலன புத்த வணக்க உச்சாடன பயிற்சி முகாம், புளிச்சபள்ளம் மங்கள புத்தவிகாரில் 11, 12 டிசம்பர் 2021 இரண்டு நாட்கள் நடைபெற்றது. தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை மகாசங்காதிபதி பிக்கு தம்மசீலர் தலைமை வகித்தார். சங்கப்பேரவை பிக்குகள் மற்றும் தமிழகம் முழுவதிலிருந்தும் வருகை தந்த புத்த விஹார்களின் 52 சங்கரத்தினர்கள், ஆசைத்தம்பி, ஆர்.பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கரத்தினர் ஆர்.போதிசந்திரன் வரவேற்றார்.



சங்கரத்தினர் மகாதினகரன் பயிற்சியின் நோக்கவுரை ஆற்றினார். பௌத்த வரலாறு மற்றும் விகார்களின் தேவை தலைப்பில் சங்கரத்தினர் டாக்டர் ராஜவர்தனன், விகார்களை பதிவு செய்தல் கணக்குகளை பராமரித்தல் தலைப்பில் வழக்கறிஞர் வசந்தராமன் ஆகியோர் விளக்கி பேசினர். தொடர்ந்து பெங்களூர் மகாபோதி சங்கம் வணக்கத்திற்குரிய பிக்குகள் ஞானரக்கிதா, பாட்டியா, சரணரக்கிதா ஆகியோர் சங்கரத்தினர்களுக்கு புத்தவிகார்களை பராமரித்தல், புத்த வழிபாடு செய்வது எப்படி? பௌத்த விகார்களை எப்படி பராமரிப்பது? பௌத்த பண்டிகைகளை எப்படி கொண்டாடுவது என்பது குறித்து விளக்கிப்பேசி பயிற்சி அளிக்கப்பட்டது. சங்கரத்தினர் ஆர்.திருநாவுக்கரசு முதல்நாள் நிறைவுரை ஆற்றினார்.

இரண்டாம் நாள் ஆனா-பானா சதி தியானம் மற்றும் மெத்த பாவனா தியானம் எப்படி செய்வது என்பது குறித்து விளக்கம் கொடுத்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின் முடிவில் தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழர் நலன் அமைச்சர் மாண்புமிகு கே.எஸ்.மஸ்தான் அவர்கள் கலந்துகொண்டு இரண்டு நாட்கள் பயிற்சிபெற்ற சங்கரத்தினர்களுக்கு சான்றிதழ் மற்றும் புத்தர் சிலைகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.

தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா புத்த வழிபாட்டு நூல்களை வழங்கி காணொலி மூலம் வாழ்த்துரை வழங்கினார். விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ஷீலாதேவிசேரன் சிறப்புரை வழங்கினார். முன்னதாக மறைந்த மூத்த சங்கரத்தினர் தங்கவயல் வாணிதாசன் படம் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் மாண்புமிகு அமைச்சரிடம், தமிழகத்தில் உள்ள பௌத்த துறவிகளான பிக்குகளுக்கு பேருந்து மற்றும் தொடருந்துகளில் இலவசமாக பயணிக்க தமிழக அரசு அடையாள அட்டைகளை வழங்கவேண்டும்.

தமிழகத்தில் 12 புத்த பிக்குகள், 2 பிக்குனிகள், புத்தவிகார்களை நிர்வகிக்கும் 80 சங்கரத்தினர்கள், விகார்களில் வழிபாடு நடத்தும் 60 புத்தபூசகர்கள் உள்ளனர். இவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகையினை கிராமப் பூசாரிகளுக்கு வழங்குவது போல் வழங்கவேண்டும். தமிழகத்தில் 100-க்கும் குறைவான விகார்கள் உள்ளன. அவற்றை மேம்படுத்த தேவையான நிதி உதவி வழங்கி உதவவேண்டும். தனியாக பௌத்த திருமணச் சட்டம் இயற்றவேண்டும் உள்ளிட்ட 14 கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுக்கப்பட்டது. அமைச்சர் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்து விடை பெற்றார். இறுதியாக சங்கரத்தினர் கோவிபார்த்திபன் மங்கள நிறைவு செய்தார்.


